ஆறுமுகநேரி சிவன் கோவிலில் திருக்கல்யாணம்
ஆறுமுகநேரி சிவன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் உள்ள சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த 21-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கோவிலில் சோமஸ்கந்தர்- அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் தவக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் கோவில் தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமி ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பட்டினப்பிரவேசமும், திருப்பள்ளியறை பூஜைகளும் நடைபெற்றன. விழாவில் கோவில் மணியம் சுப்பையா பிள்ளை, கோவில் பக்தஜன சபை செயலாளர் ஹரிகிருஷ்ணன், ஆறுமுகநேரி நகர்நல மன்ற தலைவர் பூபாலராஜன், சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.