கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. காலை 11.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்பாள் வீதி உலாவும், அதைத்தொடர்ந்து தெப்பத்தில் மஞ்சள் தீர்த்த நீராடுதலும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருமண மரபுகளுடன் நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கு அலங்காரத்தில் பூவனநாத சுவாமி, செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணத்துக்கு அழைத்து வரப்பட்டார். சுந்தரராஜபெருமாள், ராஜகோபால சுவாமி கோவில்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் திருமணசீர் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுந்தரராஜபெருமாள் சுவாமி முன்னிலையில், திருமணம் நடத்தி வைக்கப்படுவது போல முறைப்படி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து பூவனநாத சுவாமி, செண்பகவல்லி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி யானை வாகனத்திலும், அம்மன் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனர்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மனைவி இந்திராகாந்தி, மண்டகப்படிதாரரான முடுக்கு மீண்டான்பட்டி எம்.எஸ்.ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர், கோவில் நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிராமண மகாசபை மற்றும் அன்னதான கமிட்டி சார்பில் அன்னதானம் நடைபெற்றது.