திருக்காட்டுப்பள்ளி காவிரி படித்துறையில் பெண்கள் படையலிட்டு வழிபாடு


ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி படித்துறையில் பெண்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி படித்துறையில் பெண்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

ஆடிப்பெருக்கு விழா

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. திருக்காட்டு பள்ளியில் உள்ள காவிரி படித்துறையில் அதிகாலை முதலே திரளான பெண்கள் கூடி படித்துறையில் வாழை இலை போட்டு அதில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து பழங்கள், காப்பரிசி, மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, விளாம் பழம் ஆகியவற்றை வைத்து தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து காவிரி அன்னையை வழிபட்டனர்.

வழிபாடு

பின்னர் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கழுத்தில் அணிவித்து கொண்டனர். ஆண்களுக்கு கைகளில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். புதுமண தம்பதியர் புத்தாடை அணிந்து காவிரி அன்னையை வழிபட்டு தாங்கள் மண நாளில் அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி காவிரி படித்துறையில் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூரில் நீர் நிலை பகுதிகளில் காலை முதலே பெண்கள் படையலிட்டு வழிபாடு நடத்தினர்.வழக்கம்போல ஆடிப்பெருக்கு நாளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு மதுபான கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

சிறிய தேர்

ஆடிப்பெருக்கு விழாவிற்கு வந்த இளைஞர்கள் காவிரி ஆற்றின் பாலத்தினை அருகே சென்று குளித்து மகிழ்ந்தனர்.ஆடிப்பெருக்கு விழாவில் சிறப்பு அம்சமாக சிறுவர்கள் சிறுதேரினை இழுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரசாமி கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி சாமி, அம்மன் வீதி உலா நடந்தது.


Next Story