'திருக்குறளின் முழு பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும்' கவர்னர் பரபரப்பு பேச்சு
திருவள்ளுவர் ஆன்மிகத்தை பற்றி நிறைய பேசியிருக்கிறார் என்றும், திருக்குறளின் முழுப் பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை,
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 'திருக்குறள் மாநாடு' நேற்று நடந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழக கவனர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
'யுனெஸ்கோவை நோக்கி திருக்குறள் பயணம்' என்ற நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது:-
கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளையும் படித்து அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன். 12-க்கும் மேற்பட்ட மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் என்னிடம் இருக்கிறது. அவற்றை வைத்து நான் படித்து வருகிறேன். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும், பெரிய அர்த்தங்கள் அமைந்துள்ளது. ஒவ்வொரு முறை நான் அந்த புத்தகத்தை திறந்து படிக்கும்போது, அதில் உள்ள அர்த்தங்களையும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கண்டு வியக்கிறேன். உலகத்திற்கு தேவையான வரிகளை 1½ வரிகளில் அடக்கிய திருவள்ளுவர், ஒரு மாபெரும் மேதை. திருக்குறளால் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை.
ஆன்மிகம்...
திருக்குறளின் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன். நிறைய கற்று தேர்ந்தவர்கள் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளார்கள். அவற்றை படிக்கும்போது என்னால் அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ள முடிகிறது.
திருக்குறளை படிக்கும் போது இது தர்மசாஸ்திரமும், நீதி சாஸ்திரமும் கலந்த கலவையாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். எதிர்பாராத விதமாக திருக்குறள் என்பது மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் நெறிமுறைகளை மட்டுமே கொண்ட நூல் என கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பேசி வருகிறோம். ஆனால் திருவள்ளுவர் ஆன்மிகத்தை பற்றி தன் திருக்குறள்களில் நிறைய பேசியுள்ளார். அதைப்பற்றி நாம் பேச வெட்கப்படுகிறோம். முதன் முதலில் திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்த ஜி.யு.போப் பற்றி நான் பேசும்போது சிலர் எதிர்த்து சத்தமிடுவார்கள். சத்தம் ஒருபோதும் உண்மையை அழித்துவிட முடியாது. ஜி.யு.போப் தமிழை கற்றுக்கொண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தபோது அதிலிருந்த ஆன்மிகத்தை கீழே தள்ளிவிட்டார்.
மீட்டெடுக்க வேண்டும்
திருக்குறளில் முதல் குரலில் வரும் ஆதிபகவன் என்ற வார்த்தையை அவர் ஆங்கிலத்தில் கடவுள் என்று மொழிபெயர்க்காமல் முதன்மை தெய்வம் (பிரைமல் டயட்டி) என்று மொழிபெயர்த்துள்ளார். நாம் எல்லோரும் கடவுளை மதிக்கிறவர்கள், கடவுளை போற்றுகிறவர்கள். ஆதிபகவன் அனைத்து இந்திய மொழிகளிலும் காணப்படுகிறது. இது இந்திய ஆன்மிகத்தின் மையத்தில் உள்ளது. அவர் ஏன் கடவுள் என்று அதை மொழிபெயர்க்கவில்லை. இது நியாயமானது அல்ல.
திருக்குறள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. திருவள்ளுவருக்கு நாம் சிலைகளை வைக்கிறோம். அவர் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார். திருக்குறள் ஆகச்சிறந்த படைப்பு, ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். திருக்குறள் ஒரு பகுதி மக்களுக்கான நூல் இல்லை. அது உலகத்துக்கான நூல். அது இந்தியாவின் அடையாளம். திருக்குறளை முழுப் பெருமையுடன் மீட்டெடுக்க வேண்டும். இதில் ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.