மினிலாரி டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருநாவலூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
மினிலாரி டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருநாவலூர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மற்றும் போலீசார், கெடிலம் குறுக்கு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து பண்ருட்டி நோக்கி 4 மாடுகளை ஏற்றிவந்த மினிலாரியை போலீசார் மறித்தனர். பின்னர் சப்-இ்ன்ஸ்பெக்டர் மணிமேகலை, மினிலாரியில் மாடுகளை ஏற்றி வருவது சட்டப்படி குற்றமாகும். உன் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, ரூ.5 ஆயிரம் மட்டும் உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை மினிலாரியையும், டிரைவரையும் விடுவித்தார்.
பணியிடை நீக்கம்
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜை மினிலாரி டிரைவர் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை லஞ்சம் வாங்கியது உறுதியானது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் பரிந்துரையின்பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலையை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டார்.
லஞ்சம் வாங்கியதாக பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சக போலீசாரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.