"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது"
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை தற்போது மோசமாக உள்ளதாக பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கூறினார்.
திருப்பூர் பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பா.ஜ.க. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டம் வாரியாக ஆய்வு
சிறுபான்மையின மக்களுக்காக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் முறையாக பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து மாவட்டம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தி.மு.க. அரசு வாக்கு வங்கிக்காக, பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாக நடந்து வருகிறது.
ஆன்மிகத்தை அதிகம் நேசிக்கக் கூடிய பொதுமக்கள் வசிக்கும் திருப்பூரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்ட பழைய பஸ் நிலையத்துக்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
தமிழகத்தில் பயங்கரவாதம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் பாதுகாப்பு கூட தற்போது தமிழகத்தில் இல்லை. பிரதமர் மோடி, சிறுபான்மையினருக்காக செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை கொண்டு போய் சேர்ப்போம். ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய பயங்கரவாதிகள் தமிழகத்தில் உள்ளனர்.
என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக கூறியவர்கள் மீது, நானே காவல்துறையிடம் புகார் அளித்தேன். கோவையில் உயிரிழந்த ஜமேஷா முபின் உள்ளிட்டோர் மூலம் தமிழகத்தில் பயங்கரவாதம் ஊடுருவி உள்ளது. தி.மு.க. அரசின் காவல்துறை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிக்கிறது.
உளவுத்துறை செயலிழந்துவிட்டது
தமிழக உளவுத்துறை செயலிழந்துவிட்டது. ஏழை இஸ்லாமியர்களை கல்வியிலும், பொருளாதாரத்திலும் உயர்த்த வேண்டும். பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில் குக்கர் குண்டு வெடிப்பு நடந்தது.
தமிழகத்தில் நடந்தது குண்டு வெடிப்பு என்று சொல்லவே இல்லை. சிலிண்டர் வெடிப்பு என்றுதான் சொன்னார்கள். ஆனால் கர்நாடகாவில் குண்டுவெடிப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் ஒரு இஸ்லாமியரை குற்றம் சொன்னால், அனைத்து இஸ்லாமியர்களும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். தி.மு.க.வின் நாடகம் தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமுருகநாதசாமி கோவிலில் தியானம்
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சாமி கோவிலுக்கு சென்ற வேலூர் இப்ராகிம் அங்கு முருகன் சன்னதி, ஈஸ்வரன் சன்னதி ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் கோவில் வளாகத்தில் ஒருசில நிமிடங்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக கோவிலுக்கு வந்த வேலூர் இப்ராகிமுக்கு கோவில் புரோகிதர்கள் மாலை அணிவித்தும், சிறப்பு பூஜை செய்தும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். கோவிலில் உள்ள புராதன சின்னங்களையும், கோவில் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு வந்ததாக அவர் தெரிவித்தார். வேலூர் இப்ராகிம் வருகையையொட்டி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.