திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்துக்கு முன்னேறியது


திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்துக்கு முன்னேறியது
x
திருப்பூர்


பிளஸ்-2 தேர்வில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 2-வது இடத்தை எட்டிப்பிடித்தது. இதுபோல் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை கலெக்டர் வினீத் பாராட்டினார்.

மாநில அளவில் 2-வது இடம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு முடிவுகளை கலெக்டர் வினீத் நேற்று வெளியிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) பக்தவச்சலம் பெற்றுக்கொண்டார். மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகள், 8 நகராட்சி பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் பள்ளிகள், 8 சுயநிதி பள்ளிகள், 115 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 217 பள்ளிகளில் படித்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 11 ஆயிரத்து 295 மாணவர்கள், 13 ஆயிரத்து 437 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதினார்கள்.

இதில் 10 ஆயிரத்து 947 மாணவர்கள், 13 ஆயிரத்து 238 மாணவிகள் என 24 ஆயிரத்து 185 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 96.92 சதவீதமும், மாணவிகள் 98.52 சதவீதமும் என மொத்தம் 97.79 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு, 2020-ம் ஆண்டு தொடர்ச்சியாக பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் 96.57 சதவீதம் பெற்று பின்தங்கி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அரசு பள்ளிகள் தேர்ச்சியில் முதலிடம்

இதுபோல் அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை தட்டிச்சென்றது. மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 454 மாணவர்கள், 4 ஆயிரத்து 409 மாணவிகள் என மொத்தம் 8 ஆயிரத்து 863 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4 ஆயிரத்து 233 மாணவர்கள், 4 ஆயிரத்து 315 என மொத்தம் 8 ஆயிரத்து 548 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி 96.45 சதவீதத்தை எட்டி மாநில அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இது திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை பாராட்டினார். பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் கூறும்போது, 'மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் 2-வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 7-வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 2-வது இடத்துக்கு முன்னேறியது மகிழ்ச்சி. மாணவர்களின் தேர்ச்சிக்காக பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள். அரசு பள்ளி தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்' என்றார்.


Next Story