பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேசியதாவது:-
தமிழனுக்கு எதிராக செயல்படும் அரசு தி.மு.க. அரசு. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். தி.மு.க. தலைவர் பெயரைக்கூட தமிழில் வைக்கவில்லை. திராவிட மாடல் என்ற சொல் கூட தமிழ் கிடையாது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ் வாழ்க என்று பெயர் பலகை வைத்தார்கள். இன்று அந்த பலகைகள் தொங்கிக்கொண்டு இருக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 46 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இவர்கள் எப்படி தமிழை வளர்க்கிறார்கள்.
25 எம்.பி.க்கள்
அதுபோல் சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரித்துள்ளது. பயங்கரவாத செயல் தலைதூக்கியுள்ளது. கோவையில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. தீபாவளி பண்டிகையன்று குண்டு வெடிப்பு நிகழ்த்தியிருந்தால் எத்தனை அப்பாவி மக்கள் பலியாகி இருப்பார்கள். நாங்கள் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா கட்சியின் 25 எம்.பி.க்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதுபோல் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க நாம் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன், காடேஸ்வரா தங்கராஜ், பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் நடராஜன், துணை தலைவர் குணசேகர் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.