திருவள்ளுவர் உருவத்தில் வயலில் நெல் நடவு செய்த விவசாயி


திருவள்ளுவர் உருவத்தில் வயலில்  நெல் நடவு செய்த விவசாயி
x

பாரம்பரிய நெல்லுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வயலில் திருவள்ளுவர் உருவத்தில் நடவு செய்த விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூரை சேர்ந்தவர் இளங்கோவன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அவர் பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்துள்ளார். பாரம்பரிய நெல் வகைகளை மற்ற விவசாயிகளும் சாகுபடி செய்ய விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் இயற்கை விவசாயத்தை போற்றும் வகையிலும், உழவுக்கென்று தனி அதிகாரம் கொடுத்து உலக மக்களுக்கு உழவு தொழிலின் சிறப்பை உணர்த்திய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவத் கொண்டு தனது வயலில் பாரம்பரியமிக்க இரண்டு நெல் வகைகளை நடவு செய்துள்ளார்.

பாராட்டு

நேபாள மாநிலத்தைச் சேர்ந்த சின்னார் ரக நெல் ரகத்தையும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர் மல்லி என்ற ரக நெல்லையும் 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பில் இயற்கை முறையில் நடவு செய்துள்ளார். இதனை அறிந்த பலரும் நெல் வயலை பார்வையிட்டதோடு இளங்கோவனை பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், நான் இயற்கை விவசாயத்தை நேசித்து செய்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வித்தியாசத்தை கடைபிடித்து வருகிறேன். அதுபோல இந்த ஆண்டு உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழவனின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய திருவள்ளுவரை நினைவுகூர்ந்து அவரது உருவத்தை வயலில் நடவு செய்துள்ளேன்.

நம்மாழ்வார்

திருவள்ளுவர் உருவத்தை நடவு நட்டு 70 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் 40 நாட்களில் இந்த நெல் அறுவடைக்கு வந்துவிடும். அடுத்த முயற்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை வயலில் நடவு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.



Next Story