திருவண்ணாமலை அஞ்சல் கோட்டம் 9 விருதுகளை பெற்றுள்ளது
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டம் 2021-2022-ம் ஆண்டில் 9 விருதுகளை பெற்று உள்ளது என்று கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டம் 2021-2022-ம் ஆண்டில் 9 விருதுகளை பெற்று உள்ளது என்று கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
விரைவு தபால் சேவை
இது தொடர்பாக திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர். அமுதா கூறியதாவது:-
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டமானது திருவண்ணாமலை மாவட்டம் முழுமையும் உள்ளடக்கியதாகும். இந்த கோட்டத்தில் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 2 தலைமை அஞ்சல் அலுவலகங்கள், 72 துணை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் 395 கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விரைவு தபால் சேவை, பதிவு தபால் சேவை, சாதாரண தபால் சேவைகள், உள்நாட்டு வெளி நாட்டு தபால் சேவைகள், பார்சல் சேவைகள், கேஷ் ஆன் டெலிவரி தபால் சேவைகள், ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் பேங்கிங் வசதிகளுடன் கூடிய சேமிப்பு வங்கி கணக்கு, தொடர் வைப்பு தொகை, நிரந்தர வைப்புக் கணக்கு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் பொது வைப்பு நிதி கணக்கு, மாதாந்திர வருவாய் திட்டம், மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம், கிஸான் விகாஸ் மற்றும் தேசிய சேமிப்பு பத்திர திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.
குறைந்த பிரீமியத்தில் அதிக போனஸ்
மேலும் கிராமப்புற மக்களுக்கு என்று கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்டு 55 வயதிற்கு உட்பட்ட கிராமப்புற மக்கள் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான காப்பீட்டில் நடப்பு வருட போனசாக ரூ.4 ஆயிரத்து 800 வழங்கப்படும். இது குறைந்த பிரீமியத்தில் அதிக போனஸ் அளிக்கப்படும் திட்டமாகும். இந்த திட்டத்தில் திருவண்ணாமலை அஞ்சல் கோட்டமானது கடந்த நிதியாண்டில் பிரீமியத் தொகையாக ரூ.22 கோடி வசூலித்து சென்னை நகர மண்டல அளவில் 2-வது இடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளது.
திருவண்ணாமலை கோட்டத்தில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 146 சேமிப்பு கணக்குகளும், 89 ஆயிரத்து 731 செல்வ மகள் சேமிப்பு கணக்குகளும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் குழந்தைகளுக்கான ஆதார் பதிவு, ஆதார் எண்ணை பயன்படுத்தி பிற வங்கிகளின் கணக்கில் இருந்து பணம் எடுத்தல், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதியோர் உதவித் தொகை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்று இருப்பிடத்திலேயே சென்று வழங்குதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுவதுடன் மின்சார ரசீது, செல்போன் ரீசார்ஜ் போன்றவை சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பார்சல் சேவைகள் கிராமப்புறங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது. அனைத்து திட்டங்களின் பலன்களையும் மக்களுக்கு சென்று சேரும் வகையில் அஞ்சலகம் மற்றும் பொது இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தியும், பேரணிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனது.
9 விருதுகள்
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டம் கடந்த 2020-2021-ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் 10 விருதுகளை பெற்று உள்ளது. அதேபோல் 2021-2022-ம் ஆண்டில் 9 விருதுகளை பெற்று உள்ளது.
திருவண்ணாமலை மற்றும் ஆரணி தலைமை அஞ்சல் அலுவலகங்களில் MY STAMP திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் வில்லைகளை ரூ.300 செலுத்தி பெறக் கூடிய வசதி உள்ளது. இதனை பிறந்த நாட்கள் மற்றும் முக்கியமான நாட்களில் குழந்தைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசாக அளிக்கலாம்.
மேலும் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் CORPORATE MY STAMP என்ற திட்டத்தை பயன்படுத்தி தங்கள் நிறுவனங்களை விளம்பரப்படுத்தலாம். அதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலுத்தி இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.