பிளஸ்-2 தேர்வில் மாதிரி பள்ளிகளில் திருவண்ணாமலை மாணவி சாதனை
தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில் திருவண்ணாமலை ஆட்டோ டிரைவர் மகள் தர்ஷா சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள மாதிரி பள்ளிகளில் திருவண்ணாமலை ஆட்டோ டிரைவர் மகள் தர்ஷா சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
மாணவி சிறப்பிடம்
திருவண்ணாமலை பே கோபுர தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார், ஆட்டோ டிரைவர். இவரது மகள் தர்ஷா. இவர் திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாணவி தர்ஷா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் முதன்மை மாணவியாக சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தார்.
மாணவி தர்ஷா பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
தமிழ்-97, ஆங்கிலம்-95, கணிதம்-99, இயற்பியல்-99, உயிரியல்-99, வேதியியல்-100.
சாதனை படைத்த மாணவியை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பாராட்டினார்.
டாக்டராகி சேவை செய்ய...
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருவண்ணாமலையில் உள்ள அரசு மாதிரி பள்ளி தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து உள்ளது. திருவண்ணாமலை மாதிரி பள்ளியை சேர்ந்த 77 மாணவர்களில் 23 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மாணவி தர்ஷா கூறுகையில், 'எனது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். நான் மாதிரி பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்தேன். பொதுத் தேர்வின் போது ஆசிரியர்கள் தொடர்ந்து என்னை கடினமாக படிக்க தூண்டினர். தற்போது அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. டாக்டராகி ஏழை, எளியோருக்கு சேவை செய்ய உள்ளேன்' என்றார்.