திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்   கோவில் கும்பாபிஷேகம்
x

திருவட்டாா் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 418 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டாா் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 418 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிகேசவ பெருமாள் கோவில்

தென்னகத்தின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஆதிகேசவபெருமாள் கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாரில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 வைணவத்தலங்களில் 76-வதாகவும், 13 மலைநாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் திரேதாயுகத்தில் ஏற்படுத்தப்பட்டதாக தலப்புராணம் மூலம் அறியமுடிகிறது.

இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 1604-ம் ஆண்டு நடந்துள்ளது. அப்போதைய வேணாட்டு அரசர் வீர ரவிவர்மாவால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. அதன்பிறகு கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

418 ஆண்டுக்கு பிறகு...

இந்தநிலையில் 418 ஆண்டுக்கு பிறகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்ெகாள்ளப்பட்டன. விமான கும்ப கலசங்கள் மற்றும் கொடிமரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டன. இதனையடுத்து கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 29-ந் தேதி தொடங்கி நடந்தது. அந்த வகையில் பல்வேறு ஹோமங்கள் மற்றும் கலசாபிஷேகம் போன்றவை நடைபெற்றது.

இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.10 மணிக்கு ஜீவ கலச அபிஷேகம் ஆகியவை நடந்தது. அதன் பிறகு காலை 6 மணிக்கு கும்பாபிஷேக ஏற்பாடுகள் ெதாடங்கப்பட்டன.

கும்பாபிஷேகம்

காலை 6.19 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டது. அப்போது செண்டை மேளம் மற்றும் வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோவில் கருவறை விமானத்தில் 5 கலசங்கள் உள்ளன. கருவறைக்கு முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம் ஆகியவற்றின் மேல் 2 கலசங்கள் உள்ளன.

எனவே 7 குடங்களில் புனித நீரை கோவில் தந்திரி அத்தியற கோகுல் தலைமையில் நம்பூதிரிகள் எடுத்து வந்தனர். முதலில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்களில் கட்டப்பட்டு இருந்த பட்டுத்துணி அவிழ்க்கப்பட்டது. பிறகு கலசத்துக்கு பூ தூவப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கடைசியாக கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வுகள் சரியாக காலை 6.40 மணிக்கு நிறைவடைந்தன.

கருவறை விமானத்தின் மேல் உள்ள கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீரானது கோவில் மேலேயே வடிந்தது. அதே சமயம் கருவறைக்கு முன் உள்ள மண்டப கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் அப்படியே வடிந்து கீழே வந்தது. இதை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஓடோடி வந்து புனித நீரை கை நீட்டி பிடித்து தலையில் வைத்துக் கொண்டனர். சிலர் பாட்டில்களில் புனித நீரை பிடித்தனர்.

கும்பாபிஷேகம் முடிவடைந்ததும் காலை 7.30 மணிக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு பரத நாட்டியமும், மாலையில் லட்சதீபமும் நடந்தது.

கோவிலில் குவிந்த பக்தர்கள்

கும்பாபிேஷக விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பக்தர்கள் வரத் தொடங்கினர். குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மட்டும் அல்லாது கேரள மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்களை வரவேற்கும் விதமாக திருவட்டார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் ஆதிகேசவ பெருமாளின் உருவம் மின்னொளியில் ஜொலித்தது.

இரவிலேயே கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முதலில் கோவிலுக்குள் விடப்பட்டனர். அந்த வகையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் வந்தனர். அவா்கள் கோவிலுக்குள் கருவறை பிரகார மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கோவிலுக்குள் வந்திருந்தனர். ஆனால் அதிகாலை 1 மணிக்கு மேல் வந்த பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவிலின் நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டனர்.

காத்திருந்து தரிசனம்

முதலில் சாதாரணமாக இருந்த கூட்டம் அதிகாலை 3 மணியை தாண்டியதும் அலை அலையாய் வரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்தனர். அதிகாலை 5 மணி அளவில் பக்தர்கள் கூட்டமானது கோவில் வாசலில் இருந்து திருவட்டார் பஸ் நிலையம் அருகே வரை நீண்டது. அனைத்து பக்தர்களும் 'ஓம் நமோ நாராயணா' என்று கோஷமிட்டபடி வரிசையில் நின்றனர்.

கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றிய போது பெண்கள் குலவை சத்தமிட்டு பக்தியை வெளிப்படுத்தினர். கும்பாபிஷேகம் முடிந்ததும் ஆதிகேசவ பெருமாளை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தை கருத்தில் கொண்டு பக்தர்கள் வரிசையில் மெல்ல மெல்ல சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., கலெக்டர் அரவிந்த், வருவாய் அதிகாரி சிவப்பிரியா, சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், ராேஜஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், திருவிதாங்கூர் மன்னர் பரம்பரை வாரிசு லெட்சுமி பாய், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர்கள் ஞானசேகர், ஜாண்சிராணி, என்ஜினீயர் ராஜ்குமார், கோவில் மேலாளர் மோகன்குமார், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், துணைத்தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் சேகர் பாபு மட்டும் நம்பூதிரிகளுடன் கும்ப கலசத்தின் அருகே வரை சென்று வழிபட்டார்.

கும்பாபிஷேக விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கோவிலில் கம்புகள் மூலம் குறிப்பிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தடுப்புகளில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பகுதி வாரியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

சிறப்பு பஸ்கள்

கும்பாபிஷேகத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் சாமி கும்பிட வசதியாக குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டி

விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் மக்கள் அலை கடலென திரண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கோவிலை ஆன்மிக சுற்றுலா தலமாக அங்கீகரித்து மேம்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றார்.

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறுகையில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அ.தி.மு.க. ஆட்சியின் போது அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.5 கோடி நிதியை ஒதுக்கினார். பின்னர் அதற்கான பணியும் தொடங்கியது. பிறகு இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

-------


Next Story