திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகை
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனா்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 50 ஊராட்சிகளை கொண்டது. இதில் 25 ஊராட்சிகள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியிலும், 25 ஊராட்சிகள் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் உள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட 25 ஊராட்சிகளில் குறைந்த அளவில் திட்டப் பணிகள் நடைபெறுவதாகவும், திட்டப்பணிகள் நடைபெற சிலர் இடையூறு செய்வதாகவும், 15-வது மானியக்குழு நிதி திட்ட பணிகள் ஒதுக்கப்படவில்லை எனவும், வளர்ச்சி பணியில் 25 ஊராட்சிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
இவர்களிடம் ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ராமலிங்கம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், நந்தகோபால கிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சந்திரசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பேச்சுவார்த்தையில், எந்த பணியாக இருந்தாலும் 50 ஊராட்சிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும் என்றும், சத்துணவு உதவியாளர் பதவி உயர்வு முறையாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.