வழுதூர் மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு உற்சவ விழா


வழுதூர் மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு உற்சவ விழா
x

வழுதூர் மாரியம்மன் கோவில் முளைக்கொட்டு உற்சவ விழாவில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் ஆடிப்பூர முளைக்கொட்டு உற்சவவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வழுதூர் அருளொளி நகர், ரயில்வே கேட், உள்ளிட்ட தெருக்கள் முழுவதும் முத்து எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்து பரப்புதல் நடைபெற்றது. 5-ம் நாள் அம்மனுக்கு கூழ்காட்சி ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாரி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக ஆராதனை தினந்தோறும் நடைபெற்றது. இரவில் முளைக்கொட்டு, ஒயிலாட்டம், ராமாயணம் மகாபாரத பாடல்கள் மற்றும் கும்மி பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற பாடலுடன் ஒரு வாரம் விழாக்கள் நடைபெற்றது. வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஆண்கள், பெண்கள் என ஏராளமான ஆன்மிக பக்தர்கள் தலையில் சுமந்து வழுதூர் கிராமத்தை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தி கோவிலில் முளைப்பாரி இறக்கப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமை வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை மேளதாளங்கள் முழங்க கரக பாரியுடன் ஏராளமானவர்கள் ஆடி பாடி உற்சாகத்துடன் ஊர்வலமாக வந்து வழுதூர் பெரிய ஊரணி கிராமத்தில் அமைந்துள்ள பகுதியில் கரைத்தனர். ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அம்மனுக்கு அக்னி சட்டிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் வாலாந்தரவை உடைச்சியார் வலசை, தெற்கு காட்டூர், ராமநாதபுரம் தெற்கு வாணி வீதி, ஏந்தல், பட்டணம்காத்தான், திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வழுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story