முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்
திருப்பூர்,ஜூன்.22-
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுக்கும் விவகாரத்தில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநான் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் ஆலோசனைக்கூட்டம்
பி.ஏ.பி. பாசன திட்டத்துக்கு உட்பட்ட ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு திருப்பூர், கோவை மாவட்ட பி.ஏ.பி.பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசாணையை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாசன சபை தலைவர்கள் மற்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு மற்றும் பாலாறு பாசன சங்கங்களின் பிரதிநிதிகள், பாசன சங்கங்களின் தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் முன்னிலை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் பாசன சங்கங்களின் பிரதிநிதிகள், சங்க தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு விவசாயிகளுடன் பேசி முடிவு செய்து தெரிவிப்பதாக பாசன சபை தலைவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தை கைவிடுங்கள்
இது குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய பாசன திட்டமான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு குடிநீர் எடுப்பது சம்பந்தமாக அரசின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு 27-ந் தேதி பொள்ளாச்சியில் கவன ஈர்ப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி போராட்டத்தை கைவிடுங்கள் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக நீர் பாசனத்துறை அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தை சென்னையில் நடத்தி அதில் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து, நல்ல முடிவு எடுக்கப்படும். எனவே பொள்ளாச்சியில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பி.ஏ.பி.பாசன சங்க தலைவர் பரமசிவம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் கண்காணிப்பு பொறியாளர் தேவராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.