இந்த ஆண்டு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உயர்ந்து சாதனை
இந்த ஆண்டு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி வாய்க்கால், அரக்கன்கோட்டை வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சத்தியமங்கலம், கோபி, பவானி நகராட்சிகள், ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளின் குடிநீர் தேவையும் இந்த அணை மூலம் பூர்த்தியாகிறது.
நீர் தேக்க விதிமுறை
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பெய்யக்கூடும் மழையின் அளவை அடிப்படையாகக் கொண்டு அணையில் நீர் தேக்குவது குறித்து பொதுப்பணித்துறை விதிகள் வகுத்து உள்ளது. அதன்படி 105 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்கப்படும் பவானிசாகர் அணையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 31-ந் தேதி வரை 100 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட வேண்டும். இதேபோல் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை 102 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கலாம். நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதி வரை 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்பது பொதுப்பணித்துறை வகுத்து வைத்துள்ள விதியாகும். மேற்கண்ட தேதிக்குள் தண்ணீர் வரத்து அதிகரித்து முன்னதாக குறிப்பிட்ட அடியை நீர்மட்டம் எட்டினால் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக பவானி ஆற்றில் திறக்கப்படும் என்பதை வழக்கமாக கொண்டுள்ள விதி ஆகும்.
நீர்மட்ட விபரம்
இந்த ஆண்டு அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி மதியம் 12 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 101 அடியையும், அதே மாதம் 5-ந் தேதி காலை 9 மணிக்கு அணையின் நீர்மட்டம் 102 அடியையும் எட்டியது. இதைத்தொடா்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி மாலை 6 மணி வரை 102 அடியாகவே அணையின் நீர்மட்டம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 4 மணிக்கு அணையின் நீர்மட்டம் மீண்டும் 102 அடியை எட்டியது. இந்த நீர்மட்டம் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை 102 அடியாகவே நீடித்தது.
உபரிநீர் திறப்பு
இதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டிய உடன் அணையின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி காலை 10 மணி வரை தொடர்ந்து அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு அணையின் நீர்மட்டம் 104.20 அடியாக குறைந்ததால் பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி இரவு 8 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்புக் கருதி மீண்டும் பவானி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்தை பொறுத்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மதியம் 2 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 112 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது.