பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் முஸ்லிம் மக்கள் திரளானவர்கள் பங்கேற்றனர்.
ரம்ஜான் பண்டிகை
முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈகை திருநாளாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் ஏழை, எளிய மக்களுக்கு தர்மம் செய்த பிறகு இறைவன் புகழ்பாடி தொழுகை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ரமலான் நோன்பு நிறைவு பெற்று நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. அனைவரும் புத்தாடை அணிந்து பிரியாணி சமைத்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து உண்டனர். ஏழை, எளிய மக்களுக்கு பணம், உணவு, உடைகளை தானமாக கொடுத்தனர். ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.
சிறப்பு தொழுகை
திருப்பூர் பெரியபள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளானவர்கள் பங்கேற்றனர். இதுபோல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஈதுகா பள்ளிவாசலில் திடல் தொழுகை நடைபெற்றது. ஜெய்வாபாய் பள்ளி எதிரே உள்ள திடலில் தொழுகை நடைபெற்றது. மேலும் வெங்கடேஸ்வரா நகர், கோம்பை தோட்டம் மதீனா பள்ளிவாசல், எம்.எஸ்.நகர், வேலவன் நகர் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளிக்கூட மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 27 இடங்களில் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம் மக்கள் பங்கேற்றனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் 2 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் தொழுகை நடந்தபோது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.