தூத்துக்குடி: கோவில்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 2 பேர் கைது
கோவில்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவில்பட்டி,
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஒட்டினர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோர் அங்கு வந்து அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை, சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பாஜக நகரத்தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து முன்னணி அமைப்பின் நகர தலைவர் சீனிவாசன், இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட பொது செயலாளர் பரமசிவம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் கோவில்பட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.