தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் புதன்கிழமை இரவு போக்குவரத்துக்கு திறப்பு: கலெக்டர் செந்தில்ராஜ்


தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம்  புதன்கிழமை இரவு போக்குவரத்துக்கு திறப்பு: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் புதன்கிழமை இரவு போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் இன்று (புதன்கிழமை) இரவு மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் ரோட்டில் 3-வது ரெயில்வே கேட் மேம்பாலம் அமைந்து உள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக கடந்த 3-் தேதி மூடப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

திறப்பு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 3-ம் கேட் பாலம் என்பது மிகவும் சிக்கலான பாலம். இந்த பாலமானது தூத்துக்குடி ரெயில்வே கேட்டுக்கு வடபுறமும், தென்புறமும் இணைக்கக்கூடியது. இந்த பாலத்தை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகிறார்கள். இந்த பாலத்தில் மொத்தம் 12 அடுக்குகள் உள்ளன. ஓவ்வொரு அடுக்குக்கும் இடையே இணைப்பு உள்ளது. இதில் ரெயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 அடுக்குகள் பழுதடைந்தது. இதனை கண்டறிந்து சீரமைக்க சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து விட்டன. இரண்டு இணைப்புகளுக்கு இடையே ரப்பர் பொறுத்தப்பட்டு நாளைக்கு இரவு (அதாவது இன்று) பாலம் திறக்கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்படும். பொதுமக்களின் வசதிக்காகவும், சாலை பாதுகாப்பை முன்னிட்டும் மிகவிரைவாக பணியை முடித்து உள்ளோம் என்று கூறினார்.

ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், உதவி கோட்ட பொறியாளர் திருவேங்கடராமலிங்கம், உதவிபொறியாளர் ஜெயஜோதி, தூத்துக்குடி உதவி கலெக்டர் சு.சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story