தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவி நீக்கம்
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவி நீக்கம் தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா பதவி நீக்கப்பட்டு இருப்பதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் அ.தி.மு.க. 12 வார்டு உறுப்பினர்களையும், தி.மு.க. 5 வார்டு உறுப்பினர்களையும் பெற்றது. தொடர்ந்து நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
நீக்கம்
கடந்த 13-ந் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்த தலைவர் சத்யாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது.
இதில் மொத்தம் 17 உறுப்பினர்களில் 15 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு கவுன்சிலரும் தனித்தனியாக சென்று கூட்டத்துக்கான மினிட் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். இது குறித்த தகவல்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த சத்யா, தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அரசிதழில் நேற்று வெளியிடப்பட்டது.
தி.மு.க. வசமாகிறது
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க. கவுன்சிலர் பலர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், அ.தி.மு.க வசம் இருந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி தி.மு.க. வசமாகிறது.