தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் புதன்கிழமை முதல் மூடல்
இரட்டை அகலரெயில் பாதை பணிக்காக தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் புதன்கிழமை முதல் மூடப்படுகிறது.
தூத்துக்குடியில் இரட்டை அகலரெயில் பாதை பணிக்காக தூத்துக்குடி மேலூர் ரெயில்நிலையம் நாளை (புதன்கிழமை) முதல் மூடப்படுகிறது. மேலும் 2-ம் கேட்டும் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.
இரட்டை ரெயில்பாதை
மதுரை-தூத்துக்குடி இடையேயான இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் பல்வேறு கட்டமாக நடந்து வருகின்றன. இதில் மணியாச்சி முதல் மீளவிட்டான் வரையிலான இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையம் வரையிலான இரட்டை ரெயில் அகலப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
மூடல்
அதன்படி தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் பகுதியில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதனால் இன்று (புதன்கிழமை) முதல் 31.3.2023 வரை மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதே போன்று தூத்துக்குடி 2-ம் கேட்டும் மூடப்படுவதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
மேலும் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாக புதிய பஸ் நிலையத்துக்கு எதிரே இடம் மாறுகிறது. அங்கு ரெயில் நிலையத்துக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த பணி முடிந்து ரெயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, வெளியூர் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி எளிதில் பஸ்சை பிடித்து ஊருக்கு செல்ல வசதியாக இருக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.