தூத்துக்குடியில்மாநகராட்சி பள்ளி மேலாண்மை குழுவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில்மாநகராட்சி பள்ளி மேலாண்மை குழுவினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் காலிப்பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளி மேலாண்மை குழுவினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பற்றாக்குறை
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆறுமுகநேரியை சேர்ந்த ஆதவா தொண்டு நிறுவனம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். அந்த தொண்டு நிறுவனத்தினர் ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் அனைவரும் பணியில் இருந்து நின்றுவிட்டனர். மேலும், தனியார் தொண்டு நிறுவனத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் கூடுதல் ஆசிரியர்களை உடனே நியமிக்க வலியுறுத்தி பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று காலையில் தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு பள்ளி மேலாண்மைக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் எஸ்.சித்ரா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், காலி பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.