தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் சங்க ஆண்டு சந்தாவை ரூ.300 ஆக குறைக்க நடவடிக்கை: செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் சங்க ஆண்டு சந்தாவை ரூ.300 ஆக குறைக்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் நடந்தது. பிரதம பேராயரின் ஆணையரும், கோவை திருமண்டல பேராயருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமை தாங்கினார். திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சங்க ஆண்டு சந்தாவை குறைக்க வேண்டும் என்று பல்வேறு சபை மக்களின் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் சங்க ஆண்டு சந்தாவை ரூ.300 ஆக குறைக்க திருமண்டல பெருமன்ற கூட்டத்துக்கு பரிந்துரை செய்வது என்றும், திருமண்டலத்தில் பள்ளி, கல்லூரிகளில் சுய நிதி பாடப்பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருமண்டல மேல்நிலை, உயர்நிலை மற்றும் சிறப்பு பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், தொடக்க, நடுநிலை பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், சபை மன்றத் தலைவர்கள் வெல்ற்றன் ஜோசப், அகஸ்டின் கோயில்ராஜ், நவராஜ், குரோவ்ஸ் பர்னபாஸ், சாமுவேல் தாமஸ், செயற்குழு உறுப்பினர்கள், குருவானவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.