உரக்கடைக்காரரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
பிரம்மதேசம் அருகே உரக்கடைக்காரரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கோரிக்கை
பிரம்மதேசம்
பிரம்மதேசத்தை அடுத்த முருக்கேரி கிராமத்தில் நேற்று முன்தினம் உரக்கடை உரிமையாளர் வைத்தியநாதனை மர்ம நபர்கள் தாக்கியதை கண்டித்து முருக்கேரி-சிறுவாடி கிராமத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் நேற்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வைத்தியநாதனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, முருக்கேரி பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் இந்தப் பகுதி விவசாயிகளிடையே மிகப் பெரிய ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி விவசாயிகள், அவர்களோடு நெருங்கி பழகுகிற இந்த பகுதி வணிகர்களும் இந்த சம்பவத்தை, அதிர்ச்சியோடு பார்க்கிற நிலைமை உள்ளது. இந்த அடாவடித்தனத்துக்கு உடனடியாக ஒரு முடிவு வந்தாக வேண்டும். தாக்குதலில் சம்பந்தப்பட்ட 2 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை விழுப்புரம் மாவட்ட தலைவர் செஞ்சி கண்ணன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஆ.பாஸ்கரன், வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் சந்தானம், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.