பணியாற்ற விரும்பாதவர்கள், இடமாறுதலாகி சென்று விடுங்கள்
எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பணியாற்ற விரும்பாதவர்கள், இடமாறுதலாகி சென்று விடுங்கள் என்று போலீசாருக்கு புதிய சூப்பிரண்டு அதிரடியாக உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதியன்று மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையை தடுக்க தவறியதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சேஷாங் சாய், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கடும் எச்சரிக்கை
அதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை, மணல் கடத்தல், கள்ளச்சாராயம் விற்பனை, அயல்மாநில மதுபாட்டில்கள் கடத்தல் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதற்கு கையூட்டு பெற்றுக்கொண்டு துணைபோனால் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் அனைத்து போலீசாரும் பணியாற்ற வேண்டும், அவ்வாறு பணியாற்ற விரும்பவில்லை எனில் விழுப்புரத்தில் இருந்து பணியிட மாறுதலாகி சென்று விடுங்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு சேஷாங் சாய் தெரிவித்தார்.
தனிப்பிரிவு போலீசாருக்கு அறிவுரை
அதன் பின்னர் தனிப்பிரிவு போலீசாரை அழைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேஷாங் சாய் ஆலோசனை நடத்தினார். அப்போது, அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து உடனுக்குடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் குற்ற சம்பவத்திற்கு துணை போகக்கூடாது.
அதுபோல் குற்ற சம்பவங்களுக்கு துணைபோகும் போலீசாரை பற்றி தகவல் தெரிவிக்காமல் அவர்களுக்கு துணைபோனாலும் சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்.
முன்னதாக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேஷாங் சாய், மாவட்ட கலெக்டர் சி.பழனி, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.