மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் புதிய திட்டங்களுக்கு அடிக்க நாட்டியதுடன், ரூ.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் மக்களுக்கு வழங்கினார்.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் பண்பாட்டுச் சிறப்புகளால் பரவி கிடக்கிறது. 217 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள இந்த திருவண்ணாமலைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் 1989-ம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
அதே போல கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை திருவண்ணாமலையில் தொடங்கினேன். அது வெற்றி பயணமாக தொடங்கி தற்போது ஆட்சி பயணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கும் அடித்தளமாக அமைந்தது திருவண்ணாமலை தான்.
தி.மு.க. ஆட்சியில்தான் திருவண்ணாமலை கோவிலில் முழுமையாக திருப்பணிகள் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்கள், சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் ஆன்மிக வியாதிகள். மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்த கூடாது.
அறிவார்ந்தவர்கள் எங்களுக்கு ஆலோசனைகளை கூறலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். எங்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக் கிடக்கிறது. இது தேர்தல் காலம் அல்ல மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய காலம். பொய் புரட்டு பேசி மலிவான விளம்பரம் தேடுபவர்கள் பேசுபவர்கள் பற்றி ஐ டோன்ட் கேர். அதே போல் நீங்களும் ஐ டோன்ட் கேர் என கூறிவிட்டு மக்கள் பணிகளை செய்யுங்கள்.
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறோம். என் மீது மக்கள் வைத்திருக்க கூடிய நம்பிக்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பதை செயல்படுத்தி காட்டுவோம்.இவ்வாறு கூறினார்.