"1½ மணி நேரத்தில் வரவேண்டியவர்கள் உலகை விட்டே போய்விட்டார்களே"உறவினர்கள் கதறல்


1½ மணி நேரத்தில் வரவேண்டியவர்கள் உலகை விட்டே போய்விட்டார்களேஉறவினர்கள் கதறல்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

1½ மணி நேரத்தில் வீட்டுக்கு வர வேண்டியவர்கள் உலகை விட்டே போய்விட்டார்களே என்று விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கலங்கடிப்பதாக இருந்தது.

தேனி

உறவினர்கள் கதறல்

குமுளி மலைப்பாதையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி பலியான அய்யப்ப பக்தர்கள் 8 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிந்தனர்.

பிணவறைக்கு வெளியே உறவினர்கள் கதறி அழுதனர். அது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. இந்த விபத்து நடப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, பலியானவர்களில் சிலர் தங்களின் குடும்பத்தினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றனர். அப்போது சாமி தரிசனம் முடிந்து குமுளி அருகில் வந்து விட்டதாகவும், சாப்பிட்டு விட்டு வந்து கொண்டு இருப்பதாகவும், ஓரிரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

பெண்கள் மயக்கம்

நள்ளிரவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டுவார்கள் என்று எதிர்பார்த்து அவர்களின் குடும்பத்தினர் தூங்கச் சென்றனர். ஆனால், போலீசாரும், தகவல் அறிந்த உறவினர்களும் வந்து வீட்டுக் கதவை தட்டி விபத்து நடந்த விவரத்தை தெரிவித்து அதிரச் செய்தனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு சுமார் 1½ மணி நேரத்தில் வந்து விட முடியும். '1½ மணி நேரத்தில் வீட்டுக்கு வர வேண்டியவர்கள் உலகை விட்டு ஒரேயடியாக சென்று விட்டார்களே' என்று பிணவறைக்கு வெளியே அவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

அப்போது 2 பெண்கள் துக்கம் தாங்காமல் மயக்கம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆற்றுப்படுத்தினர்.


Related Tags :
Next Story