ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்: பொன்னார் பிரதான பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்தை தடுக்கும் மணல்மேடு


பொன்னார் பிரதான பாசன வாய்க்காலில் தண்ணீர் வரத்தை தடுக்கும் வகையில் மணல்மேடு உருவாகி வருவதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கதவணை, மணல் போக்கி அமைப்புகள் ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரியலூர்

பொன்னார் பாசன வாய்க்கால்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார பகுதியில் முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், அருள்மொழி, காரைக்குறிச்சி, மதனத்தூர், வாழைக்குறிச்சி, அடிக்காமலை, மேலகுடிகாடு, தென்கச்சிபெருமாள் நத்தம், கீழக்குடிகாடு, தா.பழூர், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பிரிந்து வரும் பொன்னார் பிரதான வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகின்றன.

இதனால் தா.பழூர் பகுதியில் உள்ள 11 வருவாய் கிராமங்களை அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பாசன பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மணல்மேடு

கொள்ளிடம் ஆற்றில் இருந்து பொன்னார் பிரதான வாய்க்காலுக்கு தண்ணீர் திருப்பும் பகுதி ஒவ்வொரு ஆண்டும் மணல் மேடாக மாறி வருகிறது. எனவே ஆற்றின் மையப்பகுதியில் இருந்து பொன்னார் பிரதான வாய்க்காலுக்கு தண்ணீரை கொண்டு வருவதற்காக தடுப்பு அமைப்பான கொரம்பு அமைத்து கொள்ளிடம் ஆற்று தண்ணீரை பாசனத்திற்கு திருப்பி விடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு இது தீராத துயரமாகவே இருந்து வருகிறது.

எனவே பொன்னார் பிரதான வாய்க்கால் தலைப்பு அமைந்துள்ள பகுதியில் ஒரு கதவணை அல்லது தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கொரம்பு அமைப்பது மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது மூலமாகவோ அல்லது தானாகவோ கொரம்பு அமைப்பு வீணாகி விடுகிறது. அடுத்த ஆண்டு சம்பா பருவத்திற்கு பாசனம் பெறுவதற்கு மீண்டும் விவசாயிகள் அப்பகுதியில் புதிதாக கொரம்பு அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்

ஒவ்வொரு முறை கொரம்பு அமைப்பதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. இதில் பெரும்பாலான தொகையை பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் செலவு செய்து ஒவ்வொரு ஆண்டும் சம்பா பருவத்திற்கு பாசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் சம்பா பாசனத்திற்கு பொன்னாற்றை தயார்படுத்தும் வகையில் விவசாயிகளால் அதிகாரிகள் உதவியுடன் கொரம்பு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 3 முறை காவிரி ஆறு நிரம்பியதின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து கல்லணை மற்றும் முக்கொம்பு வழியாக கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் ஆற்றில் பல்வேறு பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மணல் தற்போது பொன்னார் பிரதான வாய்க்காலில் தலைப்பு பகுதியில் குவிந்துள்ளது.

அதனால் ஆற்றில் பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் பொன்னார் பிரதான வாய்க்காலில் தண்ணீரை பாசனத்திற்கு திருப்புவது இயலாத காரியமாக உள்ளது. இதனால் சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் தா.பழூர் டெல்டா பகுதியில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

சம்பா பயிர் கருகும் அபாயம்

தற்போது விவசாயிகள் தீவிரமாக நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் நேரடி விதைப்பு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னாற்றில் தண்ணீர் வராத சூழ்நிலையில் சம்பா சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாய நிலங்களும் தண்ணீர் இல்லாமல் கருகிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக பொன்னார் பிரதான வாய்க்காலின் தலைப்பில் புதிதாக உருவாகி இருக்கும் மணல்மேட்டினை அகற்றி பொன்னாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story