புதிய ஆர்டர்கள் வருகையால் தொழில் வளர்ச்சி பெறும்


புதிய ஆர்டர்கள் வருகையால் தொழில் வளர்ச்சி பெறும்
x

புதிய ஆர்டர்கள் வருகையால் தொழில் வளர்ச்சி பெறும்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் உள்நாட்டு, வெளிநாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அதை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பனியன் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. ஆர்டர்கள் பெற்றதும், அதற்கேற்ப நூல்களை கொள்முதல் செய்து, ஆடை தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள்.

நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படும். நூல் விலை கடந்த காலங்களில் அபரிமிதமாக உயர்வு ஏற்பட்டதால், பெற்ற ஆர்டர்களுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஆடைகளை தயாரித்து வழங்க முடியவில்லை. கூடுதல் செலவு ஆனதால் புதிய ஆர்டர்களை பெற திருப்பூர் பின்னலாடைத்துறையினர் தயக்கம் காட்டியதுடன் உற்பத்தியையும் பெருமளவு நிறுத்திவிட்டனர். நூல் விலையை குறைக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 மாதகாலம் நூல் விலையை உயர்த்தக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

கிலோவுக்கு ரூ.40 குறைந்தது

நூல் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நூற்பாலைகள் அறிவிக்கும். அதன்படி நேற்று இந்த மாதம் (அக்டோபர்) நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதனால் தொழில்துறையினருக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 20-ம் நூல் ரூ.293-க்கும், 24-ம் நம்பர் ரூ.305-க்கும், 30-ம் நம்பர் ரூ.315-க்கும், 34-ம் நம்பர் ரூ.335-க்கும், 40-ம் நம்பர் ரூ.355-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செமி கோம்டு ரகம் 20-ம் நம்பர் ரூ.285-க்கும், 24-ம் நம்பர் ரூ.295-க்கும், 30-ம் நம்பர் ரூ.305-க்கும், 34-ம் நம்பர் ரூ.325-க்கும், 40-ம் நம்பர் ரூ.345-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

ஆர்டர் வரத்து அதிகரிக்கும்

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல்:-

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம். திருப்பூர் நோக்கி பனியன் ஆர்டர்கள் வரத்தொடங்கும் வேளையில் இந்த நிகழ்வு நல்ல மாற்றமாக பார்க்கிறோம். இங்கிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் தீபாவளிக்குள் கையெழுத்தாகிவிடும். அதன்பிறகு ஆர்டர்கள் வரத்து நன்றாக இருக்கும்.

நூல் விலை குறைந்து வருவது பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு சாதமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நூற்பாலைகளில் நூல் விற்பனையாகாமல் தேங்கியிருந்தது. ஆர்டர் வரும் நேரத்தில் நூல்விலையும் குறைந்துள்ளதால் நூல் விற்பனை அதிகரிக்கும். அப்போது நூற்பாலைகளும் நூல்களை விற்று பயன்பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பனியன் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

நம்பிக்கை பிறந்துள்ளது

நிட்மா சங்க தலைவர் அகில் ரத்தினசாமி:-

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய தலைமை அமைந்துள்ள நேரத்தில் நூல் விலை குறைந்திருப்பது நல்ல தொடக்கமாக பார்க்கிறோம். பஞ்சு விலையும் குறைந்து வருவதால் நூல் விலை குறைந்துள்ளது. இங்கிலாந்து, கனடா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் தீபாவளிக்குள் அமையும் என்று பியோ தலைவர் உறுதி கூறியுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு அமையும்போது பின்னலாடை ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி அதிகம் வரும். தொழில் நடக்கும்போது பொருளாதாரம் உயரும். தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். திருப்பூர் பழைய சுறுசுறுப்பை பெறும். பஞ்சு விலையை ஆண்டு முழுவதும் சீராக வைத்தால் நூல் விலை சீராகும். பனியன் உற்பத்தியாளர்களுக்கு தடையின்றி நூல் கிடைக்கும். இதன் மூலமாக ஆண்டுக்கு 25 சதவீதம் பனியன் தொழில் வளர்ச்சியை எட்டும். நூற்பாலைகள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். நல்ல முன்னெடுப்பாக இந்த நூல் விலை குறைப்பை பார்க்கிறோம். ஆர்டர்கள் வந்து தொழில் ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

திருப்பூர் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன்:-

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்தது வரவேற்கத்தக்கது. தீபாவளிக்கு பிறகு ஆர்டர் வருது அதிகரிக்கும். இன்னும் நூல் விலை கிலோ ரூ.40 குறைந்தால் ஆர்டர்களை அதிகம் எடுத்து செய்ய முடியும். நூல் விலை குறைந்தபட்சம் ஆறு மாத காலம் நிலையாக இருந்தால் ஆர்டர்கள் எடுத்துச் செய்ய முடியும். ஆடை உற்பத்தி அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.


Next Story