படத்தை 'மார்பிங்' செய்து மிரட்டி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை


படத்தை மார்பிங் செய்து மிரட்டி  மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு

படத்தை 'மார்பிங்' செய்து மாணவியை மிரட்டி, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

செல்போனில் படம்

கொடுமுடி கொளத்துப்பாளையம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் நந்தகுமார் (வயது 22). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக செல்போன் ஒன்று வாங்கி உள்ளார். அவர் அந்த செல்போனை வைத்துக்கொண்டு போவோர் வருவோரை படம் பிடித்தார். பின்னர் அவருக்கு தெரிந்த சிறுமிகள் சிலரை ஒன்றாக நிற்கவைத்து அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

அதில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரும் இருந்தார். படம் எடுத்த ஒரு வாரம் கழித்து, கடந்த 21-4-2019 அன்று நந்தகுமார் அவரது வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட 15 வயது சிறுமியுடன் அவர் மட்டும் இருப்பது போன்றும், அதில் காதல் குறியீடுகளுடன் படங்களை 'மார்பிங்' செய்து வெளியிட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த மாணவி மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். நந்தகுமார் அவருக்கு நன்கு தெரிந்தவர் என்பதால், அவரை பார்த்து ஏன் அப்படி செய்தாய் என்று கேட்டார்.

மிரட்டல்

ஆனால், நந்தகுமார், மாணவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் படங்களை மேலும் 'மார்பிங்' செய்து உடல் உறுப்புகளை தவறாக காட்டி வாட்ஸ்அப்பில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.

இதனால் அச்சம் அடைந்த மாணவி, அவரது தயாரிடம் கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து கடந்த 21-4-2019 அன்று மாலையில் நந்தகுமாரிடம் சென்று இதுபற்றி கேட்பதற்காக மாணவியின் தாயார் வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

தீக்குளித்தார்

அவரது படத்தை செல்போனில் 'மார்பிங்' செய்து தவறாக சித்தரித்ததை நினைத்து மனம் உடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நிலையை பயன்படுத்தி, எதிர்பாராத வகையில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி 22-4-2019 அதிகாலையில் இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வாலிபர் நந்தகுமாரை கைது செய்தனர்.

ஆயுள்தண்டனை

மேலும் அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.


Next Story