இந்த மாத நூல் விலையில் மாற்றமில்லை


இந்த மாத நூல் விலையில் மாற்றமில்லை
x
திருப்பூர்

திருப்பூர்:

பின்னலாடை தொழிலின் மூலப்பொருளான நூல் விலையில் இந்த மாதம் மாற்றமில்லை. கடந்த மாத விலையே தொடர்கிறது. நூல் விலையை கிலோவுக்கு ரூ.70 குறைக்க வேண்டும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னலாடை தொழில் முடக்கம்

பின்னலாடை தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் விளங்கி வருகிறது. கடந்த 18 மாத காலமாக அபரிமிதமாக உயர்ந்த நூல் விலையால் பனியன் தொழில் முடங்கி போயுள்ளது. இதன்காரணமாக ஆர்டர்கள் எடுக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள். மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டங்கள், வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தினார்கள். ஆனால் ஏற்றுமதிக்கான தடை குறித்து மத்திய அரசு அறிவிக்கவில்லை. வழக்கமாக நூல் விலையை மாதத்தின் முதல்நாள் நூற்பாலை உரிமையாளர்கள் அறிவிப்பார்கள். கடந்த ஏப்ரல் மாதம் ரூ.30-ம், மே மாதம் ரூ.40-ம் என ஒரே அடியாக விலை அதிகரித்தது. இது பின்னலாடை உற்பத்தியாளர்களை பெரிதும் பாதித்தது.

நூல் விலையில் மாற்றமில்லை

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை பின்னலாடை உற்பத்தியாளர்கள் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து பஞ்சு இறக்குமதிக்கான வரியை வருகிற செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பின்னலாடை உற்பத்தி மந்த நிலையிலேயே உள்ளது.

இந்தநிலையில் இந்த மாதத்துக்கான நூல் விலை நேற்று அறிவிக்கப்பட்டது. நூல் விலை குறையும் என்று உற்பத்தியாளர்கள் காத்திருந்த நிலையில், நூல் விலையில் மாற்றம் இல்லை. கடந்த மாத நூல் விலை அப்படியே தொடர்வதாக நூற்பாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கடந்த மாதம் நூல் விலை கிலோ ரூ.480-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே விலை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தினாலும், கிலோவுக்கு ரூ.70 குறைந்தால் தான் முந்தைய தொழில் நிலையை எட்ட முடியும் என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story