வீடு புகுந்து 6 மாத குழந்தை கடத்தல் பெண்கள் உள்பட 3 பேர் கைது
வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கீழபாப்பாக்குடியை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இசக்கியம்மாள். இந்த தம்பதிக்கு பிரியங்கா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது.
கடந்த 19-ந்தேதி இரவு வீட்டில் குழந்தையுடன் இசக்கியம்மாள் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.
கைது
மேலும், இதுதொடர்பாக தனிப்படை போலீசார், குழந்தையை கடத்திச்சென்றவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் குழந்தை கடத்தியதாக கீழபாப்பாக்குடியை சேர்ந்த முருகன் மனைவி கனியம்மாள் (வயது 57), ஜெகன் மனைவி முத்துசெல்வி (30), ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கனியம்மாள், முத்துசெல்வி ஆகியோர் இசக்கியம்மாள் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் கார்த்திகேயன், குழந்தையை விற்க முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த குழந்தையை போலீசார் மீட்டனர்.
புகார் அளித்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.