குளத்துக்குள் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயர் பலி


குளத்துக்குள் தூக்கி வீசப்பட்ட  என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி குளத்துக்குள் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி குளத்துக்குள் தூக்கி வீசப்பட்ட என்ஜினீயர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குளத்தில் வாலிபர் பிணம்

தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியில் கொக்கடிகுளம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற ஒருவர் குளத்தின் கரையோரத்தில் தண்ணீரில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடப்பதை கண்டார்.

அங்கு சென்று பார்த்தபோது, அதன் அருகில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் மூழ்கி இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு வந்த தக்கலை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

என்ஜினீயர்

மேலும், போலீசார் இறந்த வாலிபரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் இருந்த அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்த வாலிபர் மார்த்தாண்டம் அருகே உள்ள கீழ்பம்மம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் டான்சந்திர சுதன் என்பவரின் ஒரே மகன் பிரின் அனுஜ்டாம் (வயது 27) என்பது தெரியவந்தது. என்ஜினீயரான அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். திருமணமாகாத பிரின் அனுஜ்டாம் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு நாகர்கோவிலில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

மின்கம்பத்தில் மோதியது

காட்டாத்துறை அருகில் உள்ள கொக்கிடிகுளம் பகுதியில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற மின்கம்பத்தின் மீது மோதியுள்ளது.

இதில், மோதிய வேகத்தில் தலையில் பலத்த காயமடைந்த பிரின் அனுஜ்டாம் மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த குளத்துக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளார். இரவு நேரம் என்பதாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும் அவரை யாரும் கவனிக்கவில்லை. இதனால், உயிருக்கு போராடிய பிரின் அனுஜ்டாம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story