திருநங்கை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரூ.21 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான திருநங்கை பபிதாரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ரூ.21 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான திருநங்கை பபிதாரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருநங்கை
விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்த திருநங்கை பபிதா ரோஸ் (வயது 27) மீது, ஏற்கனவே பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் அரண்மனை தோட்டம் அருகே புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாரரான முருகேசன் என்பவர் கட்டிக்கொடுத்துள்ளர். அத்துடன் அவரிடம் ரூ.10 லட்சமும் பபிதாரோஸ் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
ரூ.21 லட்சம் மோசடி
தனக்கு தரவேண்டிய ரூ.21 லட்சத்தை திருநங்கை பபிதா ரோசிடம், முருகேசன் கேட்டபோது அவருக்கு பணத்தை கொடுக்க மறுத்ததுடன், அவர் முருகேசனுக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகேசன் வளநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை பபிதோ ரோசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
போலீஸ் விசாரணையில், திருநங்கை பபிதா ரோஸ், பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், பலரிடம் ஏமாற்றி பணம் பெற்றதாகவும் ஏற்கனவே அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளது, தற்போது பண மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பபிதாரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் திருநங்கை பபிதாரோசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார்.