தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய தேர்ப்பவனி
விருதுநகர் அருகில் உள்ள ஆர்.ஆர்.நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தேர்ப்பவனி நடைபெற்றது.இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருகில் ஆர்.ஆர்.நகரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி மாலையில் ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட்டர்ராய் அடிகளார், துணை பங்கு தந்தை அருள்தாஸ் அடிகளார், பங்கு இறை மக்கள் முன்னிலையில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருஉருவம் பொறித்த கொடியினை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலையில் திருப்பலியும் கத்தோலிக்க மறையுரையும் நடைபெற்றது.
திருவிழாவின் 9-ம் நாளான நேற்று சிவகாசி பங்குத்தந்தை ஜான் மார்ட்டின் அடிகளார் தலைமையில் தேர்ப்பவனி நடைபெற்றது. தேரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் மின்விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தேர் புறப்பட்டதும் ஆலயத்தில் இருந்த திரளான கிறிஸ்தவர்கள் உற்சாகத்துடன் கைதட்டி மரியே வாழ்க என கோஷமிட்டு பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர்.
இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நன்றி திருப்பலியுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புறநகர் பங்குத்தந்தை பீட்டர் ராயடிகளார், துணை பங்கு தந்தை அருள்தாஸ் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை உறுப்பினர்கள், தூய இதய மரியன்னை சபையினர் மற்றும் பங்கு இறை மக்கள் செய்தனர்.