ஆபத்தான முறையில் கயிறு கட்டி சாலையை கடக்கும் கிராம மக்கள்
வேப்பனப்பள்ளி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சாலை மூழ்கியதால் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கயிறு கட்டி சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என கிராமமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சாலை மூழ்கியதால் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கயிறு கட்டி சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என கிராமமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மலை கிராமம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஏக்கல்நத்தம் மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டும்.
இந்த நிலையில் சுதந்திரம் பெற்றது முதல் இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் கழுதை மூலமாக போக்குவரத்து நடந்தது. மேலும் தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் தலையில் சுமந்தும், கழுதை மீது ஏற்றியும் கொண்டு செல்லப்பட்டன.
தார்சாலை
இதனால் அந்த கிராம மக்கள் பல முறை தேர்தல்களை புறக்கணிக்க போவதாக அறிவித்து வாக்களிக்காமல் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர் போராட்டங்களின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கல்நத்தம் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் வைத்த கோரிக்கை நிறைவேறியதால் அந்த பகுதி மலை கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக மலை கிராம பகுதிகளில் சாலைகளை மழைநீர் மூழ்கடித்து செல்கிறது.
மக்கள் சிரமம்
அதேபோல ஏக்கல்நத்தம் பகுதியில் சாலை அமைக்கும் நேரத்தில் மலை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தரைப்பாலம் இல்லாத காரணத்தாலும், சாலை தாழ்வாக அமைக்கப்பட்டதாலும் இந்த பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக காட்டாற்று வெள்ளத்தில் அந்த சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் இடுப்பளவு உள்ள தண்ணீரில் தினமும் கிராம மக்கள் ஆபத்தான முறையில் கயிறு கட்டி சாலையை கடந்து வருகிறார்கள். மழை நின்றாலும் சாலையில் தண்ணீர் வற்றாமல் தாழ்வான பகுதிகளில் தேங்கியபடியே நிற்கிறது. இதனால் சாலை அமைத்தும் அந்த கிராம மக்கள் நிம்மதி இழந்து சாலையை கடக்க சிரமப்பட்டே வருகிறார்கள்.
வேப்பனப்பள்ளி அருகே 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து கிடைத்தும் பயனில்லாமல் உள்ள சாலையை சீரமைத்து, மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.