புலி நடமாட்டம்; வாகன ஓட்டிகள் பீதி
ஊட்டி அருகே சாலையில் நடமாடிய புலியால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே சாலையில் நடமாடிய புலியால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.
ஒய்யாரமாக வந்த புலி
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருவதாலும், வனப்பகுதிகள் குறைந்து வருவதாலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
இதனால் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் ஊட்டியில் இருந்து பைக்காரா செல்லும் சாலையில் உள்ள கிளன்மார்கன் பகுதியில் புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து வந்தது. பின்னர் சற்று நேரத்தில் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.
வனத்துறையினர் எச்சரிக்கை
சாலையில் நடமாடிய புலியை, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ேபானில் வீடியோ பதிவு செய்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கிளன்மார்கன் அடர்ந்த வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. ஆனால், இவை இதுவரை சாலை பகுதிக்கு வந்தது கிடையாது. தற்போது சாலையில் புலி நடமாட்டம் உள்ளதாக வீடியோ வெளிவந்து உள்ளது. இது கிளன்மார்கன் பகுதி இல்லை. பைக்காராவில் இருந்து முக்குறுத்தி அணைக்கு செல்லும் வழியில் வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். புலிகளை பார்த்தால் தொந்தரவு செய்யக்கூடாது. மேலும் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.