சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு அவகாசம்
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு அவகாசம் -ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
நடிகர் விஷால் சினிமா படங்கள் தயாரிக்க மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடி கடன் வாங்கினார். இந்த கடனை லைகா நிறுவனம் அடைத்தது. பின்னர் இந்த தொகையை திருப்பித்தரும் வரை, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தை மீறி "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை வெளியிட விஷால் முயற்சிப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ரூ.15 கோடியை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், விஷால் அந்த தொகையை டெபாசிட் செய்யவில்லை.
இதையடுத்து, அவரை நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் ஆஜராகி, ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால், ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவில்லை என்றும், தயாரிப்பு தொழிலில் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இதுகுறித்து பிரமாண மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விஷால் பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் ஆஜராகவில்லை.
அவர் சார்பில் ஆஜரான வக்கீல், "சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்" என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கி விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.