கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த அவகாசம் -ஐகோர்ட்டு உத்தரவு


கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை நடத்த அவகாசம் -ஐகோர்ட்டு உத்தரவு
x

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தமிழ்நாடு அரசுக்கு 6 மாதம் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தகுதியில்லாத பலர் உறுப்பினர்களாக அவசரகதியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி, திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண் டும்' என்று கோரியிருந்தார்.

உத்தரவாதம்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, 'சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தி அனுப்பும்படி அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறைபாடுகளை நீக்காமல் நடத்தும் தேர்தல் நியாயமாக இருக்காது என்பதால் திருத்தப்பட்ட உறுப்பினர் பட்டியல் வெளியிட்ட பிறகே தேர்தல் அறிவிக்கப்படும்' என்று உத்தரவாதம் அளித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, உறுப்பினர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்றுவருவதாக கூறினார்.

அவகாசம்

கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் சினேகா, உறுப்பினர் பட்டியலில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்யவும், தேர்தலை நடத்தவும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், உறுப்பினர் பட்டியலை திருத்தம் செய்து, கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் வழங்குவதாக உத்தரவிட்டனர்.


Next Story