மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி பெண் பலி


மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி பெண் பலி
x

குடியாத்தம் அருகே மகன் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது டிப்பர் லாரி மோதி பெண் பலியானார்.

வேலூர்

ஜாதகம் பார்க்க

கே.வி.குப்பத்தை அடுத்த பலவநடத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, ஓய்வு பெற்ற மத்திய கலால் வரித்துறை அதிகாரி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகனின் திருமணம் சம்பந்தமாக ஜோதிடரை பார்ப்பதற்காக நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் மூர்த்தியும் அவரது மனைவி சாந்தியும் குடியாத்தம் சென்றுள்ளனர்.

பலமநேர் ரோட்டில் தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சாந்திக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் குடியாத்தம் ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தின் அருகே ஓட்டல் நடத்தி வரும் தி.மு.க. பிரமுகர் பாஸ்கர் (52) என்பவர் விபத்து நடந்த இடத்தில் கிடந்த பை, செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்து பார்த்தபோது பையில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டுகள் இருந்துள்ளது. இதுகுறித்து மூர்த்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தார். அவரை அனைவரும் பாராட்டினார்கள்.


Next Story