செய்யாற்றில் தீர்த்தவாரி
மண்டகொளத்தூர் கிராமத்தில் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மண்டகொளத்தூர் கிராமத்தில் உள்ள தர்மஸம்வர்த்தினி தாயார் சமேத தர்மேஸ்வரர் சிவன் கோவிலில் சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும் காலமான தருணத்தில் ரதசப்தமி விழா நடந்தது.
இதை முன்னிட்டு செய்யாற்றில் தீர்த்தவாரி என்ற ஆற்றுத் திருவிழா நடந்தது.
இதையொட்டி அங்குள்ள செய்யாற்றுக்கு அலங்கரிக்கப்பட்ட தர்மஸம்வர்த்தினி தாயார், தர்மேஸ்வரரை கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் தீர்த்தவாரி நடந்தது.
அப்போது பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், செய்யாற்று தண்ணீர் ஆகியவை மூலம் சிவாச்சாரியார்களால் தீர்த்தவாரி செய்தனர்.
இதையடுத்து சாமிக்கு அலங்காரம் செய்து, ரிஷிப வாகனத்தில் மண்டகொளத்தூருக்கு கொண்டு சென்றனர். இதில் கரிக்காத்தூர், ஈயகுளத்தூர், திருமலை, வடமாதிமங்கலம், தேவிகாபுரம், அடையாளமங்கலம், கொழாவூர், கீழ்பட்டு, புலிவானந்தல், மொடையூர், நரசிங்கபுரம், குப்பம் உள்பட பல கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
மேலும் சாமிக்கு தேங்காய் உடைத்து, பூமாலை அணிவித்து ஆராதனை செய்தனர்.
இரவு முழுவதும் கிராமத்தில் உள்ள முக்கிய வீதியின் வழியாக சாமி வீதி உலா நடந்தது. இதையொட்டி கிராமத்தில் மா இலை தோரணம், மாகோலமிட்டு, வாழைமரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வாணவேடிக்கை நடந்தது. இதையடுத்து மீண்டும் சாமியை கோவிலில் கொண்டு போய் வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.