திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் தூய்மை பணி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தூய்மை பணி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்-44, 48, திருச்செந்தூர் போலீசார் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி இணைந்து சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 'மாஸ் கிளினிங்' என்ற பெயரில் தூய்மை பணி மேற்கொண்டன. இதில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தை சார்ந்த 120 மாணவர்கள், போலீசார் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு, பிளாஸ்டிக் கழிவுகள், பீங்கான் பாட்டில்கள், பக்தர்களால் கழற்றி போடப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். மேலும் அதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தனர். மொத்தம் சுமார் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
தூய்மை பணியை சிறப்பாக செய்த மாணவர்கள், போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கவிதா, சத்தியலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.