சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் திருக்கல்யாணம்
சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் சேவுகப்பெருமாள் அய்யனார், பூர்ணா, புஷ்கலா தேவியருடன் திருமணக்கோலத்தில் கோவிலில் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.தொடர்ந்து வேத மந்திரங்கள் குலால சிவாச்சாரியார்கள், பூசகர்கள் முழங்க சிங்கம்புணரி கிராமத்தார்கள் நாட்டார்கள் முன்னிலையில் சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பெண்கள் தங்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொண்டனர். அதன்பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டுத்தோறும் திருக்கல்யாணம் முடிந்த உடன் சிறிது நேரம் மழை பெய்வது வழக்கம். அதன்படி நேற்று திருக்கல்யாணம் முடிந்தவுடன் அரை மணி நேரம் மழை பெய்தது. 13-ந்தேதி தேரோட்டமும், 14-ந்தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடைபெற்று வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள் நாட்டார்கள் செய்து வருகின்றனர்.