திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினார்


திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினார்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாங்கூரில் இன்று 11 பெருமாள் கருட சேவை உற்சவத்தையொட்டி திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

நாங்கூரில் இன்று 11 பெருமாள் கருட சேவை உற்சவத்தையொட்டி திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினார்.

கருடசேவை உற்சவம்

சீர்காழி அருகே நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் 11 பெருமாள்களைப்பற்றி திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் பட்டாச்சாரியார்களால் பாடப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறும். இதுவே கருட சேவை விழாவாகும்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக குமுதவல்லி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி திருநகரி கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் இருந்து நேற்று அதிகாலை மேளம் தாளம் முழங்கிட திரளான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டார்.

திருக்குரவலூர் கிராமம்

காலை நேரடியாக திருமங்கையாழ்வார் அவதரித்த திருக்குரவலூர் கிராமத்திற்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அவர் உக்கிர நரசிம்ம பெருமாள் கோவிலில் எழுந்தருளினார். அப்போது கோவில் பட்டாச்சாரியார் பார்த்தசாரதி தலைமையில் வேத மந்திரங்கள் முழங்கிட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நரசிம்மரை வழிபட்ட பின்னர் மங்கை மடம் வீர நரசிம்ம பெருமாள் கோவில், காவலம்பாடி கண்ணன் கோவில், திருமேனி கூடம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்ற ஆழ்வார் மேல்நாங்கூர் மஞ்ச குளிமண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

பட்டாசு வெடித்து வரவேற்பு

இதனை அடுத்து நாங்கூர் பகுதிக்கு வருகை தந்த திருமங்கையாழ்வாருக்கு பட்டாசுகள் வெடித்து பக்தர்கள் வரவேற்றனர். பின்னர் நாங்கூர் பகுதியில் உள்ள 6 பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்ட பின்னர், இன்று நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். இதில் நாகை மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கிராம பொது நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

11 பெருமாள் கருட சேவை உற்சவ ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்களிடம் கிராம பிரமுகர்கள் வரும் ஆண்டு முதல் கருடசேவை உற்சவத்தை ஒட்டி மாவட்ட அளவில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும், விழாவிற்கு அரசு நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஊராட்சி செயலர் சீனிவாசன், தி.மு.க. பிரமுகர் பழனிவேல், பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story