அரசு டவுன் பஸ்கள் வராததால் வாகன நிறுத்தமாக மாறி வரும் திருப்பரங்குன்றம் பஸ் நிலையம்
அரசு டவுன் பஸ்கள் வராததால் வாகன நிறுத்தமாக திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் மாறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்,
அரசு டவுன் பஸ்கள் வராததால் வாகன நிறுத்தமாக திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் மாறி வருவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பஸ் நிலையம்
மதுரைக்கு அடுத்தபடியாக கோவில் நகரமாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு என்று "5" எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. அந்தபஸ்கள் யாவும் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டதோடு மீண்டும் பயணிகளை ஏற்றி செல்வதற்காக, குறிப்பிட்ட நேரம் நின்று சென்று வந்தன. அதனால் கோவிலுக்கு வந்து செல்லக் கூடிய வெளியூர் பக்தர்களும், உள்ளூர் பொதுமக்களும் நேரடியாக பஸ் நிலையத்திற்கு வந்து பெரியார் பஸ் நிலையம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் என்று தங்கள் செல்லகூடிய அரசு பஸ்களில் ஏறி பயணித்து வந்தனர்.
இந்த நிலையில் பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் நவீன கழிப்பறை கட்டப்பட்டது. அந்த கழிப்பறையானது மக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது. ஆனால் முறையாக பராமரிக்க தவறிவிட்டனர். அதனால் நாளடைவில் கழிப்பறை மூடப்பட்டு காட்சி பொருளாகி விட்டது. இந்த நிலையில் பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதனால் பஸ் நிலையமானது சுருங்கியது.
வாகன நிறுத்தமாக...
இதற்கிடையே அரசு டவுன் பஸ்கள் யாவும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது பஸ் நிலைய வளாகத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வரக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்த வாகனங்கள் யாவும் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. அதனால் வாகனங்கள் நிறுத்தும் இடமாக உருமாறி காணப்படுகிறது.
பஸ் நிலையம் இருந்தும் அரசு டவுன் பஸ்கள் வந்து செல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவிலுக்கு வந்து செல்லகூடிய மதுரை, திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராம, நகர பகுதியை சார்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சன்னதி பஸ் நிறுத்ததிற்கு சென்று, தங்கள் செல்லக்கூடிய பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். நிழற்குடைகள் இல்லாத நிலையில் மழை, வெயிலுக்கு பஸ் நிறுத்ததில் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தை முறைப்படுத்தி பஸ்கள் வந்து செல்வதற்கும், சன்னதி பஸ் நிறுத்தின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதோடு பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
எதிர்பார்ப்பு
திருப்பரங்குன்றம் சுற்றுலாதலமாக வளர்ந்து வருவதால் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு வசதியாக கோவில் நகரம் மற்றும், சுற்றுலா தலங்களில் இருந்து விரைவு பஸ் இயக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காக தற்போது உள்ள பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும்.
அதாவது தினசரி மார்க்கெட், பழைய நகராட்சி அலுவலகத்தை விரிவான பஸ் நிலையமாக உருவாக்க வேண்டும். மேலும் இதே இடத்தில் நவீனபஸ் நிலையம், தினசரி காய்கறி மார்க்கெட், அரசு அலுவலகங்கள் மற்றும், வணிக வளாகங்கள் என்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன்மூலம் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வசதி கிடைக்கும். எனவே மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிப்பு
திருப்பரங்குன்றம் கோமகன்: திருப்பரங்குன்றம் கோவிலில் முகூர்த்த காலங்களில் சராசரி 50 முதல் 100 திருமணங்கள் நடக்கிறது. கோவிலில் 12 மாதமும் திருவிழா நடந்து வருகிறது. அதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மற்றும் திருமணத்திற்காக வருபவர்கள் அனைவரும் வந்து செல்வதற்கு பஸ் நிலையம் அவசியம். எனக்கு 82 வயதாகிறது. 60 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த பஸ் நிலையம் தற்போது இருந்தும் இல்லாத நிலையாக இருப்பதால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவது வருத்தம் அளிக்கிறது.
இந்துசமய அறநிலையத்துறை ஒய்வு பெற்ற அதிகாரி ஸ்வர்னா செல்வராஜ்: சுற்றுலாதலத்தில் பஸ் நிலையம் இருந்தும் இல்லாத நிலையாக இருப்பது வருத்தமாக உள்ளது. பஸ் நிலையம் செயல்படாததால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறார்கள். திருவிழா காலங்களில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கிறார்கள். அவர்கள் வந்து செல்வதற்கும், பல கிராமங்களில் இருந்து காய்கனிகள் வாங்குவதற்காக தினசரி மார்க்கெட்டுக்கு வரக்கூடிய கிராம மக்களுக்கு பஸ் நிலையமும், கூடுதல் பஸ் வசதியும் அவசியம் வேண்டும்.
வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல்:
பஸ் நிலையம் செயல்பட வேண்டும். பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு பஸ் வசதி வேண்டும். பஸ் நிலையம் சார்ந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் சர்வீஸ் ரோடு போடப்படவேண்டும் என்று மதுரை மாநகராட்சி கமிஷனர், மேயரிடம் நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆகவே மேயர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.