திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா -கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா  -கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தெப்பத் திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தெப்பத் திருவிழா 10 நாட்கள் கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழ வருகிற 31-தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 7.25 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு புதிய வஸ்திரம் சாத்தப்பட்டது. மேலும் தங்கம், பவளம், வைடூரியம் போன்ற அணிகலன்களாலும், வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

கொடியேற்றம்

இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் தங்க மூலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் பால், பன்னீர், இளநீர், புனிதநீர் உள்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தர்ப்பைபுல், மாவிலை, பூமாலை மற்றும் பட்டுவஸ்திரம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி சாமி கும்பிட்டனர். கொடிகம்பத்திற்கும், சுவாமி, அம்பாளுக்கும் மகா தீபாராதனை நடந்தது.

தெப்பஉற்சவம்

திருவிழாவையொட்டி வருகிற 31-ந் தேதி வரை தினமும் காலை தங்க சப்பர வாகனத்திலும், இரவு 7 மணியளவில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி ரிஷப வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி தெப்ப முட்டு தள்ளுதல் மற்றும் தேரோட்டம் நடக்கிறது, திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 31-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்காக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளம் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.


Next Story