சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருவிழாவான நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் கோரதத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முன்பு இருந்து தேர் புறப்பட்டு ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவில் முன்பு வந்தடைந்தது. இதில் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.