பாசன கண்மாய்க்கு கால்வாய் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம்


பாசன கண்மாய்க்கு கால்வாய் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம்
x

ஆவுடையார்கோவிலில் பாசன கண்மாய்க்கு கால்வாய் அமைத்து கொடுத்த திருவாவடுதுறை ஆதீனம் பற்றி பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

பழமையான பாலம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை) குளத்து குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பது குறித்து தொல்லியல் ஆய்வுக் கழகத்தினருக்கு தகவல் கிடைத்தது. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராசேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் பாலத்திலிருந்த கல்வெட்டை படியெடுத்தனர். அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்பதம்பிரான் என்பவரின் உத்தரவுபடி இந்த பாலம் கட்டப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:-

திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் பதினேழாவது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை (சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக்கொண்டு வந்துள்ளார்.

கல்வெட்டில் தகவல்

குளத்துகுடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கை கட்டுப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார். போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணர்ந்து ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றி உதவியுள்ளார்.

இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது. இது இந்த பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் தகவலாக பொறிக்கப்பட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் பட்டமேற்று நமசிவாய தேசிகர் என்பவர் 15-ம் நூற்றாண்டில் ஆதீனத்தை தொடங்கியுள்ளார். கண்ணப்ப தம்பிரான் 16, 17 தேசிகர் காலத்தில் வாழ்ந்துள்ளார். ஆவுடையார்கோவில் திருப்பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

அறப்பணி

ஆதீனத்தின் சார்பில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரை ஆதரித்த காரணத்தால் முழு ஈடுபாட்டுடன் சுவடிகளை திரட்டி பல நூல்களை பதிப்பித்தார். இவர் கண்ணப்ப தம்பிரானிடம் தமது தேடல் பணிக்காக உதவிகளை பெற்றவர். ஆதீனம் ஆன்மிகப்பணியோடு அறப்பணிகளையும் செய்துள்ளதை இந்த கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story