டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3, 3-ஏ தேர்வை 59 சதவீதம் பேர் எழுதவில்லை
வேலூர் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3, 3-ஏ தேர்வுகளை 59 சதவீதம் பேர் எழுதவில்லை. 3,144 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த குடிமை பணிகளில் அடங்கிய கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர், தொழில் மற்றும் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் காலிப்பணியிடங்கள் 15 (குரூப்-3 ஏ) மற்றும் ஜூனியர் இன்ஸ்பெக்டர், ஸ்டோர் கீப்பர் பதவிகள் காலிப்பணியிடங்கள் 15 (குரூப்-3) ஆகியவற்றுக்கான எழுத்துத்தேர்வு சென்னை, வேலூர் உள்பட 17 மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வுகளை எழுத 7,689 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வேலூர் தொரப்பாடி அரசு பொறியியல் கல்லூரி, கொணவட்டம் அரசுப்பள்ளி, கொசப்பேட்டை ஈ.வெ.ரா. நாகம்மை பெண்கள் பள்ளி, அரசு முஸ்லிம்பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, டி.கே.எம். கல்லூரி, காட்பாடி டான்போஸ்கோ பள்ளி உள்பட 27 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தேர்வு நேற்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. இதையொட்டி தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
59 சதவீதம் பேர் எழுதவில்லை
குரூப்-3, குரூப்-3 ஏ தேர்வுகள் எழுத விண்ணப்பித்த 7,689 பேரில் 3,144 பேர் மட்டு தேர்வு எழுதினார்கள். இது 41 சதவீதமாகும். 59 சதவீதம் பேர் அதாவது 4,545 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. காட்பாடி காந்திநகர் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வுகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வுமையம் மற்றும் தேர்வறைகளை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுஅறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் என்று 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
தேர்வு மையங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குறைந்த காலிப்பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்ததால் பலர் தேர்வு எழுத வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.