டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 84,267 பேர் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 84 ஆயிரத்து 267 பேர் எழுதினர். தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குரூப்-4 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 99 ஆயிரத்து 446 பேர் எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் ஆகிய 10 தாலுகா அலுவலகங் களுக்குட்பட்ட 259 இடங்களில் 334 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கினாலும், தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வந்துவிட வேண்டும். வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்று ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வாக்குவாதம்
இதன்படி கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த சில தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் காலை 7.30 மணிக்கே வந்து காத்திருந்தனர். அவர்கள் 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 9 மணி வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு பிறகு வந்த தேர்வர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதனால் அவர்கள் வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். சிலர் போலீசாரை மீறி தேர்வு மையத்திற்குள் சென்றனர். ஆனால் அவர்கள் 9 மணிக்கு பிறகு வந்ததால், தேர்வு எழுதவரவில்லை என்று குறிப்பெடுத்து விட்டனர். இதனால் அவர்கள் வேறுவழியின்றி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
84,267 பேர் எழுதினர்
கடலூர் பீச் ரோட்டில் உள்ள ஒரு தேர்வு மையத்திலும் காலை 9 மணிக்கு 30-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வந்தனர். அவர்களை அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் போலீசாரிடம் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் எங்களுக்கு வந்த உத்தரவை கடைபிடிக்கிறோம். நீங்கள் இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டு செல்லுங்கள் என்றனர். இதனால் அவர்கள் சிறிது நேரம் தேர்வு மைய வாசலில் காத்திருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. அதன்பிறகே தேர்வர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தேர்வை 84 ஆயிரத்து 267 பேர் எழுதினர். இந்த தேர்வுக்காக 54 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவினர் வினாத்தாளை பாது காப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை பாது காப்புடன் கொண்டு வந்தனர். இது தவிர தேர்வு மையங்களை கண்காணிக்க 31 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று யாராவது காப்பி அடித்து எழுதுகிறார்களா? என்று கண்காணித்தனர். முன்னதாக கடலூாில் உள்ள தேர்வு மையங்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.